தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மாதம் முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணி இடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
மேலும் இந்த வருடத்துக்கான திட்ட தேர்வுக்கால அட்டவணையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 9,494 காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொதுவாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் வேலை பார்க்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போதுவரை பணி வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
இந்த நியமன தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிகளில் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. அதுமட்டுமல்லாமல் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.