தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால் அரசு பல்வேறு வேலை வாய்ப்புகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் உடற்கல்வி இயக்குனர் நிலை-1, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள் நிலை உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது.
அதன்படி சுமார் 2,207 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை இந்த பணிக்கான தேர்வு நடைபெறும் என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக இணையதளத்தில் 15-ஆம் தேதி வரையிலான தேர்வுகளின் விவரங்கள் வெளியிடபட்டது. அடுத்ததாக கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு தேதியும் வெளியிடப்பட்டது.
அதேபோல் தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வில் மொத்தம் 2.6 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 160 முதல் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் தடுக்க தேர்வு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் குறிப்பாக 200 மேற்பார்வை குழுக்கள் முறைகேடுகளைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு இந்த தேர்வை நேரலை காட்சி பதிவு செய்வதற்கும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.