தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக போட்டித் தேர்வுகள் பல ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல போட்டித் தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய நாளை (பிப்..12) தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு ஆசிரியர் கல்வி வாரியமான TRB சார்பாக கணினி வழியில் நடைபெறும்.
இதற்காக மாநிலம் முழுவதும் 160-180 வரை தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை எழுத மொத்தம் 2.6 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்து அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால் இந்த தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தடுப்பூசி போடாதவர்கள் தேர்வு நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா சோதனை செய்த சான்றிதழ் எடுத்து வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு பள்ளிக்கல்வித்துறை மற்றும் டி.ஆர்.பி.க்கு தேர்வர்கள் மின்னஞ்சல் வாயிலாக கோரிக்கை அனுப்பி இருக்கின்றனர். இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட தேர்வுகளில் இது போன்ற எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.