தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இவற்றிற்கு தகுதியும், விருப்பமும் இருக்கிற முதுகலை பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இதையடுத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர்கள் நிலை-1ல் உள்ள கடந்த 2020-21 காலிப் பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு சென்ற பிப்ரவரி மாதம் நடந்தது. இப்பணிகளின் நேரடி நியமனத்திற்காக நடைபெற்ற போட்டித் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பானது சென்ற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. அது தொடர்பான ஆட்சேபனைகளை ஏப்ரல் 1ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 29 ஆயிரத்து 141 நபர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் முடிய 1 மாதம் தேவைப்படுகிறது. இப்பணி முடிந்ததும் இறுதி விடைக் குறிப்பு வெளியிடப்படும். அதனை தொடர்ந்து விடைத்தாள்கள் கணினிவழி திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்தபட்சமாக 45 தினங்கள் தேவைப்படும். அடுத்ததாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு ஜூலைமாதம் இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியமானது தெரிவித்துள்ளது.