தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் டிஎன் டிஆர்பி மூலம் சிறப்பாசிரியர் பணியான தையல், ஓவியம் மற்றும் இசை ஆகிய பிரிவுகளுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டு அதற்கான தேர்வுகளும் நடைபெற்றது. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு அதற்கான தற்காலிக தேர்வுப் பட்டியலும் தொடர்ந்து வெளியிடப்பட்டது.
ஆனால் உயர் நீதிமன்றத்தில் இந்த தேர்வு முடிவுகள் குறித்து வழக்கு தொடரப்பட்டு ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் முதலில் வெளியான தேர்ச்சி பட்டியலின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் திருத்தப்பட்ட தேர்ச்சி பட்டியல் வெளியானது அடிப்படையில் மீண்டும் சரிபார்ப்பு பணிகள் வருகின்ற அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும். அதுமட்டுமில்லாமல் தையல் ஓவியம் மற்றும் இசை ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு பட்டியலில் குறைபாடுகள் இருந்தால் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். அதற்கு ஓவியம் பிரிவு [email protected] என்ற மின்னஞ்சல், இசை [email protected] என்ற மின்னஞ்சல் மற்றும் தையல் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி தெரிவிக்கலாம்.