தமிழக பட்ஜெட் உரையில் பெண்களை கவரும் வகையில் அறிவித்துள்ள அறிவிப்பு பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் , தமிழகத்தில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என்ற அசத்தலான அறிவிப்பை பட்ஜெட் உரையில் துணை முதலவர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வேலை செய்து வரும் பெண்கள் அரசின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த பேருந்துகளில் ரூ 75 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி படுத்துவதோடு மேலும் கூடுதலாக பெண்களை பணிபுரிய ஊக்குவிக்கும் என்று பெண்கள் அரசை பாராட்டி வருகின்றனர்.