கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உரை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைப்படி அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயணிக்கும்.
ஆட்சி மாறிவிடும் என்று சிலர் கூறிவந்தனர். ஆனால் நமது அரசு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் திறமையுடன் பயணிக்கிறது.
பிரபல ஆங்கிலப் பத்திரிகை எடப்பாடி பழனிசாமி ஆட்சியை பாராட்டியுள்ளது.
நிதிப் பற்றாக்குறை
தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.21 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது. அது 2020-21ஆம் ஆண்டில் பத்தாயிரத்து 970 கோடியாக குறையும்.
பொருளாதார வளர்ச்சி
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளை தமிழ்நாடு திறம்பட சமாளித்துள்ளது. மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக உள்ளது.
கீழடி அகழவராய்ச்சி
கீழடி அகழ்வராய்ச்சியில் கிடைக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில மற்றும் தொல்லியல் துறையின் ஒப்புதல் பெற்றுள்ளது. தொல்லியல் துறைக்கு 33.9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.