தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 14, அதிமுக 12, சுயேச்சை 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கோவை மாநகராட்சி 18-வது வார்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொங்கு மக்கள் தேசம் கட்சியின் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். வாணியம்பாடியில் திமுக 8 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.