நேற்று நடைபெற்ற 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து நீடித்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனிடையே இன்று நடைபெற உள்ள 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .
இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் என்.ஜெகதீசன் , அலெக்சாண்டர், சோனு யாதவ் மற்றும் சித்தார்த் உட்பட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக பணியாற்றி வருவதால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் பலம் வாய்ந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்அணியை எதிர்கொள்வது திருப்பூர் அணிக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் , மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது .