டிஎன்பிஎல் டி20 போட்டியில் திண்டுக்கல் அணிக்கு எதிரான 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று 2-வது தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்தது. ஆனால் சேப்பாக் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திண்டுக்கல் அணி தடுமாறியது .இதில் அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 50 ரன்கள் குவித்தார்.இறுதியாக திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதன்பிறகு களமிறங்கிய சேப்பாக் அணி 104 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி 53 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கினார். அடுத்ததாக ஜெகதீசன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக திண்டுக்கல் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள சேப்பாக்கம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் திருச்சி அணியுடன் மோத உள்ளது.