தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை தேர்வாணையம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் வருடந்தோறும் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை.
கொரோனா பரவல் குறைந்த சூழலில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அந்த வகையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் தற்போது ஆங்கில மொழி பாடம் நீக்கப்பட்டுள்ளது. அதன்பின் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த தமிழ் மொழி தகுதி தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும். இத்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மற்ற தாள்கள் திருத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதன்பின் புதிதாக தமிழ் மொழி தகுதி சேர்க்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் பழைய பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுமா அல்லது புதிய பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுமா என்று தேர்வர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து போட்டி தேர்வுகளும் புதிய பாடத்திட்டத்தின்படி தான் தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான பாடத்திட்டத்தினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
www.tnpsc.gov.in