தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் நடப்பு ஆண்டு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்து இருந்தது. அதாவது, 5831 காலிப் பணியிடங்கள் குரூப் 2 தேர்வின் வாயிலாக நிரப்பப்படும். அதுமட்டுமல்லாமல் குரூப் 2, 2A தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வருகிற 23 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்பின் மே மாதம் 21 ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டு, ஜூன் மாதம் இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த வருடம் ஜனவரி 2023ஆம் ஆண்டு கலந்தாய்வு நடைபெறும். இந்த குருப்-2 தேர்வை எழுத விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தேர்வு முதல்நிலை, முதன்மை நிலை என்று இருகட்டமாக நடைபெறும். இதில் முதல்நிலைத் தேர்வு என்பது கொள்குறி வகை தேர்வாக இருக்கும். அதன்பின் முதன்மைத் தேர்வு என்பது விரிவான எழுத்து தேர்வாக நடைபெறும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று இருமொழிகளிலும் தேர்வை எழுதலாம்.
அடுத்த மாதம் குரூப் 4 தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் குரூப் 4 தேர்வை எழுதுவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். மேலும் வினா ஒவ்வொன்றிற்கும் 1.5 மதிப்பெண்கள் என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். தற்போது தமிழ் மொழி சேர்க்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை திட்டமிட்டு படித்தால் எளிதாக வெற்றிஅடைய முடியும்.