Categories
தேசிய செய்திகள்

TNPSC பதவி உயர்வு…. மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்…. முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்..!!

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மார்க் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாததற்கு தமிழக அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு ஊழியர்களுக்கு பணி உயர்வு என்பது சீனியாரிட்டி, மதிப் பெண்கள் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பிரமோஷன்களில் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவற்றை கொண்டு வந்தது. ஆனால் அவற்றை ரத்து செய்து மதிப்பெண் அடிப்படை, சீனியாரிட்டி அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரிகள் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த மேல்முறையீட்டு மனுவில், இவர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மேற்கொண்டுள்ளனர் எனக்கூறப்பட்டது.  அதிகாரிகள் தவறுகள் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய நாள் அவர்களுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி அப்போதைய தலைமை செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை  செயலாளர் பிரபாகரன், முன்னாள் டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், முன்னாள் பொதுப்பணி துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், முன்னாள் டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட 9 அதிகாரிகள்  நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலமாக ஆஜராகினர்..

அப்போது எந்தவிதமான நிபந்தனை இல்லாத மன்னிப்பை கூறுவதாகவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் எந்தவித உள்நோக்கம் இல்லை என்று கூறினார்கள்.. இதையடுத்து அவர்களது மன்னிப்பை ஏற்று வழக்கை முடித்து வைத்தது. மேலும்  தீர்ப்பை உடனடியாக முழுமையாக செயல்படுத்துவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவதில் எந்தவித தயக்கமும் காட்டக்கூடாது. உயர் பதவியில் இருந்துகொண்டு நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல் படுத்தாமல் இருந்துகொண்டு உங்களை தேவையில்லாமல், உங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்க வைத்துவிடக்கூடாது என்று கடுமையான வார்த்தைகளையும், முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

Categories

Tech |