தமிழகத்தில் அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு, தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் தமிழ் மொழித் தேர்வில் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே தகுதி என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனை படிப்படியாக செயல்படுத்தும் வகையில் தற்போது நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான விவரங்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொது ஆங்கிலம் நீக்கப்பட்டு தமிழ் மற்றும் பொது அறிவு என 2 பிரிவுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. பகுதி ஒன்றில் தமிழ் மொழித்தாள் இடம்பெற்றுள்ளது.
10 ஆம் வகுப்பு தரப்பில் கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்பட்டு அதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதற்கான பாடப்பகுதியில் இலக்கணம், இலக்கியம்,தமிழ் அறிஞர்களும் மற்றும் தமிழ் தொண்டுகளும் என மூன்று பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பகுதி இரண்டில் பொது அறிவு இடம்பெற்றுள்ளது. அதிலும் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். எனவே மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதில் முக்கிய பாடத்திட்டங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை அறிய டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.