தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமானது (டிஎன்பிஎஸ்சி) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வை கணினி வழியே நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள 7,382 பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 300 மதிப்பெண்களில் 90 பெற்றால் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் பெயர் வெளியிடப்படும் என்றும் தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வை கணினி வழியே நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துறையின் கீழ்வரும் 16மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளை நிரப்புவதற்கு போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வு ஜூன் 19ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் கணினி வழியாக நடைபெறும். இந்த தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்வு சென்னை, மதுரை , கோவை, திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களில் மட்டுமே நடத்தப்படும். இதில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் சமூகவியல், சமூக பணி, உளவியல், குழந்தைகள் மேம்பாடு அல்லது குற்றவியல் போன்றவற்றில் ஏதாவது ஒருபிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூபாய் 56,100 முதல் 2.05 லட்சம் வரை வழங்கப்படும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 32-க்குள் இருக்க வேண்டும். அத்துடன் சிறப்பு பிரிவினருக்கு 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இதுவரையிலும் அரசு ஊழியர்களுக்கான துறைதேர்வுகள் மட்டுமே கணினி வழியாக நடத்தப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வும் கணினி முறையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய டிஎன்பிஎஸ்சி-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in ஐ பார்வையிடுவதன் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.