தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிரப்புகின்றது. அரசு வேலை என்பது பலரது வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது. இந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து தற்போது அரசு வேலை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன்படி மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் பொதுத்துறை நிறுவனங்கள் பணியாளர் நியமனம், அந்தந்த துறைகள் மற்றும் கழகங்கள் மூலமாக இதுவரையிலும் நடைபெற்று வந்தது.
இந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், குடிசை மாற்று வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆவின், குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் என அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கழகங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாகவே இனி பணியாளர் சேர்க்கை நடைபெறும் என்று நிதித்துறை மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகளில் அரசியல்வாதிகள் தலையீடு இதுவரை அதிகமாக இருந்தது.
ஆனால் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனங்கள் நடைபெறும் என்பதால் பல்வேறு சிக்கல்கள் தவிர்க்கப்படும். இந்த புதிய மாற்றத்தின் முறையில் பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை தாங்களே நியமனம் செய்து கொள்ளும் தன்னாட்சி அதிகாரத்தை இழந்ததாகவும் மற்றும் மின்சார வாரியம், ஆவின் ஆகிய ஒரு சில நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த முடிவு தொடர்பாக சமூக ஆர்வலர்களும், இந்த வேலைகளுக்காக தயாராகி வரும் ஆயிரக்கணக்கான தேர்வர்களும் வரவேற்கத்தக்கது என கூறுகின்றனர்