குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் மாதிரி விடைகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அதில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டது. அதில் 60 கேள்விகளுக்கான விடை தவறு என்று கூறி இதனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிபுணர் குழு ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறாக இருப்பதாகவும், அனைத்து தேர்வர்களுக்கு அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து வேலுமணி உள்ளிட்டோர் மேல்முறையீட்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மாதிரி விடைகள் பற்றி விவாதிக்காமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.எந்த அடிப்படையில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறு என நிபுணர்கள் முடிவுக்கு வந்தது என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டிருந்தது. மேலும் அனைத்து கேள்விகளும் பதில்களும் ஆய்வு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது.
இதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அனைத்து பதிலை மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், முகமது சபிக் அடங்கிய அமர்வு வழக்கு குறித்து பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.