குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது
கடந்தாண்டு குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் எப்படி ஒரே மாதிரி அடுத்தடுத்து 100 இடங்களை பிடிக்க முடியும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அடுத்தடுத்து 100 இடங்களை பிடித்தது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் TNPSC இதற்கான விசாரணையை தொடங்கியுள்ளது.
அதே போல 2017-18_ஆம் ஆண்டில் நடந்த குரூப் 2ஏ தேர்விலும் 30_க்கும் மேற்பட்டோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி என்றும் TNPSC விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மேலும் ராமேஸ்வரம் , கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதிய 19 பேர் முதல் 19 இடத்தை பிடித்தது எப்படி ? என்று TNPSC விசாரணை நடத்தி வருகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி, விளக்கமளித்துள்ளது. அதில், குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. நேர்மையான செயல் பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும் தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டு அமைதி காக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.