டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டை அடுத்து அதில் தொடர்புடைய 14 பேரை சிபிசிஐடி அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர். இதனையடுத்து குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக வந்த தகவலையடுத்து அதில் தொடர்புடைய சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சித்தாண்டியை சிபிசிஐடி அலுவலர்கள் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், சித்தாண்டியின் சகோதரரும் சிவகங்கையைச் சேர்ந்த சார்பு பதிவாளருமான வேல்முருகனை சிவகங்கை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அவரிடம் உதவி ஆய்வாளர் சித்தாண்டி, அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக சிபிசிஐடி அலுவலர்கள் தெரிவித்தனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளில் தொடர்புடைய முகப்பேரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவர் தலைமறைவாக இருந்துவருகிறார். சிபிசிஐடி காவல் துறையினர் முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் இன்று சோதனை செய்துவருகின்றனர். மேலும் சென்னை எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள், கொரியர் நிறுவன ஊழியர்கள் உள்பட மூன்று பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
ஏற்கனவே முறைகேடு தொடர்பாக 14 பேரில் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.