தமிழகத்தில் பல்வேறு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வின் மூலம் காலியாக உள்ள 5,831 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்வுக்கான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் காணமுடியும்.
நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகள்:
நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச்செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் போன்ற பதவிகள் நிரப்பப்படுகிறது.
நேர்முகத்தேர்வு அற்ற பதவிகள்:
உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பதவிகள் நிரப்பப்படுகிறது.
கல்வித்தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு மட்டும் கூடுதல் தகுதிகள் தேவைப்படும்.
வயது வரம்பு:
பொதுப் பிரிவினருக்கு 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதைத்தவிர இதர பிரிவினருக்கு 40 வயது வரை தளர்வுகள் உண்டு.
தேர்வுமுறை:
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக பணி தேர்வு செய்யப்படும். அதுமட்டுமின்றி நேர்முகத்தேர்வு அல்லாத சில பதவிகளும் உண்டு.
முதல்நிலை தேர்வு:
இந்த முதல்நிலை தேர்வில் பொது அறிவு பகுதியில் பட்டபடிப்பு தரத்தில் 175 வினாக்களும், 10-ம் வகுப்பு தரத்தில் 25 கணக்குகளும் கேட்கப்படும். பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், பண்பாடு மற்றும் தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறிவு வினாக்கள் இடம் பெறும்.
முதன்மை தேர்வு:
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதன்மை தேர்வில் பகுதி அ மற்றும் ஆ என 2 பகுதிகள் இருக்கிறது. தேர்வுக்கான காலம் 3 மணி நேரங்கள் ஆகும்.
பகுதி-அ:
இந்தப் பகுதியில் மொத்தம் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் என 4 வினாக்கள் இடம்பெறும். ஒரு வினாவிற்கு 25 மதிப்பெண் வீதம் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படும். குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பகுதி ஆ மதிப்பீடு செய்யப்படும்.
பகுதி-ஆ:
இந்தப் பகுதியில் மொத்தம் 10 வினாக்கள் கேட்கப்படும். அதில் ஒரு வினாவுக்கு 20 மதிப்பெண் வீதம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அதில் சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் மற்றும் திருக்குறளில் சில தலைப்புகளில் இருந்து கட்டுரை எழுதுதல், அலுவல் சார்ந்த கடிதம் எழுதுதல் உள்ளிட்ட தலைப்புகளில் வினாக்கள் இடம்பெறும்.
தெரிவு முறை:
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு முதன்மைத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தெரிவு நடத்தப்படும்.