தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தேர்வுகள் கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குரூப் 4, VAO, குரூப்-2 தேர்வுகள் தமிழகத்தில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் அரசு பணிக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அரசு தேர்வுகளில் ஆங்கில மொழி விருப்ப தேர்வு நீக்கப்பட்டு, தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட்டு அதில் 40 சதவீத மதிப்பெண்கள் கண்டிப்பாக பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுகளில் தமிழ் மொழியின் பாடத்திட்டம் 10-ம் வகுப்பு அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் பாட வினாத்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெறாதவர்களின் மற்ற வினாத்தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் 4 தேர்வில் முதல் பகுதியில் 100 வினாக்கள் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் மட்டுமே கொடுக்கப்படும். அதில் 40 சரியான பதில்களை அளித்தால் மட்டுமே அடுத்த பகுதியான பொதுஅறிவு பகுதி மதிப்பிடப்படும். ஆனால் குரூப்-2 தேர்வில் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள் என்று 2 கட்டங்கள் இருக்கிறது. அதில் முதன்மைத் தேர்வு நிலையில் தமிழ்மொழி வினாக்கள் இருக்கும்.
அதன்படி தேர்வில் மொழி பெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் மற்றும் கட்டுரை வரைதல் பகுதிகள் 100 மதிப்பெண்களுக்கு இருக்கும். இந்த பகுதியில் இருந்து தேர்வர்கள் 40 மதிப்பெண் கட்டாயம் பெறவேண்டும். குரூப்-4 தேர்வுக்கு தேர்வர்கள் 18 வயது முதல் 30 வயது வரையும், கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப்-2 தேர்வர்கள், பொது பிரிவினருக்கு 20 முதல் 30 வரையும், மற்ற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அனைத்து விவரங்கள் மற்றும் மாற்றங்களையும் தேர்வர்கள் கவனித்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.