தமிழக அரசு தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும் எனவும் அதில் தேர்ச்சி பெற்றவர்களின் தாள்கள் மட்டுமே அடுத்த நிலையில் மதிப்பிடப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்களும், தமிழ் மொழியில் புலமை இல்லாதவர்களும் அதிகமான அளவில் நியமனம் செய்யப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாக புகார்கள் எழுந்து வருகின்றது. இதனை தவிர்க்கவே தமிழகத்தில் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், நன்கு மொழி அறிவு பெற்றவர்களுக்குமே வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்யும் அடிப்படையில் அரசு முடிவு எடுத்தது.
அந்த வகையில் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு பணி தேர்வுகளுக்கும் தமிழ்மொழி தகுதி தாள் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில மொழியை தேர்வு செய்ய இயலாது. இதனிடையில் தமிழில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயம் ஆகும். டிஎன்பிஎஸ்சி தேர்வை போன்றே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வாயிலாக காவலர்களை நியமனம் செய்யும் ஆணையத்திலும் தமிழ்மொழி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு குறைந்தபட்சமாக 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சியடைய முடியும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையமானது தெரிவித்துள்ளது. அதாவது தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் OMR விடைத்தாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கும், இதற்கு அடுத்தகட்டமாக முக்கியமான தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் காவலர்கள் கண்டிப்பாக தமிழில் 40 மதிப்பெண்கள் பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது