காய்ச்சலால் உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய உதவ யாரும் முன்வராத செயல் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா எம்.கே.உப்பள்ளி காந்திநகரை சேர்ந்தவர், சதப்பா பரசப்பா சககாரா (வயது 71). இவர் சென்ற 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் அவர் பெலகாவியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 2 நாள் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பி உள்ளார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சதப்பா திடீரென்று உயிரிழந்து விட்டார். அதன்பின் சதப்பாவின் மகனும், குடும்பத்தினரும் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
ஆனால் சதப்பாக்கு காய்ச்சல் இருந்ததால், அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்ற பீதியில் அந்தப் பகுதி மக்கள் யாரும் வெளியே வந்து அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. அதனால் முதியவரின் மகன், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் கொடுத்தார். ஆனால் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்க வரவில்லை. இதனால் சதப்பாவின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவரது மகன் தவித்து வந்தார். இதை அறிந்த நண்பர் ஒருவர், சதப்பாவின் மகனுக்கு உதவ முன்வந்தார். இதையடுத்து முதியவரின் உடலை அவரது மகனும், மகனின் நண்பரும் முழுகவச உடையை அணிந்து கொண்டு ஒரு சைக்கிளில் வைத்து அடக்கம் செய்ய தூக்கிச் சென்றனர்.
இதுபற்றிய புகைப்படம், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனே இதுபற்றி அறிந்த நகரசபை உறுப்பினர் புட்டப்ப பட்டாஷெட்டி என்பவர் முதியவரின் உடலை அடக்கம் செய்ய வாகன வசதி செய்து கொடுத்துள்ளனர். அதன் பின்னர் முதியவரின் உடல் அமரர் ஊர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டு அந்த கிராமத்தை ஒட்டிய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா பீதியில், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் உதவி செய்யாத நிலையில் சைக்கிளில் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.