தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் 43 நாட்களுக்கு பின்னர் நேற்று மதுக்கடைகள் திறப்பட்ட நிலையில் அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடி என ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக 80 முதல் 90 கோடி வரை மது விற்பனையாகும். தீபாவளி, புத்தாண்டு தினங்களில் ரூ. 120 கோடி முதல் ரூ.200 கோடி வரை விற்பனையாகும். அரசுக்கு மிக முக்கிய வருவாய் தரும் துறையாக செயல்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது.
இதனை தொடர்ந்து மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் திட்டமிட்டபடி நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டது. தமிழகத்தில் சுமார் 3,700க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மட்டும் ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.