வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த பெண்ணை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பவித்திரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவி கற்பகம் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கற்பகம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே வந்து வாசலில் அமர்ந்துள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த பாம்பு ஒன்று கற்பகத்தை கடித்துள்ளது.
இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி கற்பகம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.