சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனிப்படை காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு காட்டன் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த குளிர்பான கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் முத்துராஜ் மற்றும் செல்வகுமார் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 7, 574 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.