இந்தியாவில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்குமாறு பிரதமர் மோடி மத்திய அரசு துறைகளை கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக மத்திய அரசு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி புதிய வேலை வாய்ப்பு ஆணைகளை வழங்கினார். இந்நிலையில் மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டம் இன்று தொடங்குகிறது. இதில் சுமார் 71 ஆயிரம் பேருக்கு காகிதம் மூலமாக வேலை வாய்ப்பு கடிதங்கள் வழங்கப்பட இருக்கிறது.
இந்த வேலை வாய்ப்பு ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக வழங்குவதோடு, வேலைவாய்ப்பில் இணைந்தவர்களுக்கு ஆன்லைன் புத்தாக்க பயிற்சியையும் தொடங்கி வைத்து அவர்களுடன் உரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சி குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுவதால் அங்கு மட்டும் நடக்காது. மேலும் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் பிரதமர் ஆர்வமும், முன்னுரிமையும் கொடுப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.