இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளாக வருடம்தோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து, நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ போன்ற பூக்களால் அலங்கரித்து, முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, அவல், பொரி, கொய்யாப்பழம் ஆகிய பொருட்களை வைத்து படையல் போட்டு விநாயகரை வழிபடுவர்.
விநாயகர் சதுர்த்தி நாளன்று, உணவு உண்ணாமல் அந்த நாள் முழுவதும் விரதம் இருந்து வழிபடுவோரும் இருக்கின்றனர். மேலும் விநாயகர் கோவில்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த விநாயகர் சதுர்த்தி விழாவானது பல தரப்பின் மக்களும், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், கொண்டாடப்படுகிறது.