டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 148 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர் ,என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடந்த 2020 ம் ஆண்டு டோக்கியோவில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது . ஆனால் கடந்த ஆண்டு, உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு வரும் ஜூலை 23 ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியை காண ,பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஜப்பானில் அவசர நிலை இருந்தாலும், திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி கட்டாயம் நடைபெறும் என்று அமைப்புக் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற, 148 இந்திய விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரான நரிந்தர் பத்ரா கூறும்போது, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் வீராங்கனைகள் 148 பேரில், 17 பேர் 2 வது டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டனர். 131 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இவர்களுடன் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 13 வீரர்கள் , முதல் டோஸை போட்டுக்கொண்டனர் இதில் 2 பேர் , 2 வது டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டனர். இதனால் பாரா ஒலிம்பிக் வீரர்களையும் சேர்த்தால் ,மொத்தமாக 163 பேர் முதல் தடுப்பூசியை செலுத்தி கொண்டதாக அவர் கூறினார். அத்துடன் ஒலிம்பிக் போட்டி பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் 87 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 23 பேர் 2 வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்,என்று அவர் கூறினார்.