விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நாளை பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள்.
இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் இந்த போராட்டம் கட்டாயம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதில் அரசியல் கட்சியினர் மற்றும் பிரபல நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு தழுவிய முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தொல்லை தர விரும்பவில்லை என்பதால், இந்த முழுஅடைப்பு நாளை பகல் 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடியும் என இந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் மருத்துவ சேவைகளான ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய சேவைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது.