கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். அதன்படி நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கி உள்ளது.
சென்னையில் இருந்து விமான சேவை 60 நாட்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது. முதல் விமானம் சென்னையில் இருந்து காலை 6.40 மணிக்கு 111 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது. முதல் விமானமாக இன்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. மாஸ்க்குடன் கூடுதலாக முகம் முழுவதையும் மறைக்கும் பிளாஸ்டிக் மாஸ்க்கையும் பயணிகள் அணிந்துள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் நாளை பிற்பகல் முதல் விமான சேவை தொடங்கும் என விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நாளை பிற்பகல் 1.20 மணிக்கு சென்னைக்கு விமான சேவை தொடங்க உள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பகல் 12.35 மணிக்கு விமான சேவை தொடங்கப்படும் என அறிவித்துள்ளனர். முன்னதாக சென்னையில் இருந்து சேலத்துக்கு விமான சேவை 27ம் தேதி முதல் துவங்க உள்ளது என தகவல் அளித்துள்ளனர்.