கொரோனா பேரிடர் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு மறுக்கப்பட்ட மெரினா கடற்கரை, உயர் நீதிமன்றத்தின் கடும் அழுத்தம் காரணமாக நாளை முதல் திறக்கப்படுகிறது. முகக் கவசத்துடன் வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பல மாதங்கள் தளர்வில்லாமல் போக்குவரத்து, வெளியில் வருவது தடை செய்யப்பட்டது.
கொரோனா தொற்றிலிருந்து காக்க, ஒன்று கூடுவதைத் தடுக்க, சுற்றுலாத் தலங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதில் சென்னை நகரில் எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ஒன்றுகூடும் மெரினா கடற்கரையும் மூடப்பட்டது. பொதுமக்களுக்கு மறுக்கப்பட்டது.
இந்நிலையில் ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் பல மாதங்கள் ஆகியும் மெரினா கடற்கரையை மட்டும் திறக்காமல் அரசு காலம் தாழ்த்தியது. இதுகுறித்து உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. அரசு திறக்காவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என எச்சரித்தது. இதையடுத்து கடந்த மாதம் ஊரடங்கு தளர்வின்போது மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். டிச.14 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாளை மெரினா கடற்கரையைத் திறக்க உள்ளதால் கடற்கரையில் சர்வீஸ் சாலையில் உள்ள போலீஸாரின் தடுப்புவேலிகள் அகற்றப்படுகின்றன. சர்வீஸ் சாலை சுத்தம் செய்யப்படுகிறது.
மழையால் மணல் பரப்பில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. திறக்கப்பட்டாலும், மெரினாவில் எளிய மக்களுக்குப் பயனுள்ளதாகவும், ஏழை வியாபாரிகளுக்கு வாழ்வாதாரமாகவும் இருந்த சிறு தள்ளுவண்டிக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மாநகராட்சி மூலம் 900 சிறு தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கும் பணி நடந்து வருவதால் மெரினா தற்சமயம் வெறிச்சோடிதான் இருக்கும். மெரினா கடற்கரையில் அனுமதிக்கப்பட்டாலும் பாதுகாப்புக் கருதி முகக்கவசம் கட்டாயம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். முகக்கவசம் அணிவதை அதிகாரிகள் கண்காணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.