அரசு செலவில் உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மொத்த செலவீனத்தில் 20% செலவை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட பல்வேறு செலவுகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், அரசு அலுவலகங்களில் புதிதாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அலுவலக ரீதியாக விருந்து, மத்திய உணவு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளது. மேலும் கருணை அடிப்படையிலான பணிகள் மட்டும் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தலாம். மேலும் நடப்பு நிதியாண்டுக்கான பொதுவான பணியிட மறுதலைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றால் தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிதி சுமையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடு செய்யும் வகையில் மேற்கண்ட பல்வேறு நிதி சிக்கனங்களை அறிவித்துள்ளது.