விருதுநகர் மாவட்டத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் செட்டியார் பட்டியில் இருந்து தளவாய் புரத்திற்கு செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து இந்த சாலையை சீர் செய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் வெகு நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டே நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கான பணிகள் இரண்டு வாரத்திற்கு முன்பே தொடங்கியுள்ள நிலையில் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றது. தற்போது சாலையில் உள்ள பழைய தார் நீக்கிவிட்டு அதில் கற்கள் மற்றும் மண் நிரப்பப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு விபத்து நேரிடும் என்றும், சுற்றுசூழல் மாசுபடும் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு சாலை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.