சென்னை மாவட்டத்தில் உள்ள கேகே நகர் பகுதியில் நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நரேந்திரன் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை நரேந்திரன் முழுவதுமாக திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் கடன் கொடுத்த நிறுவனம் 50,000 ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை நரேந்திரன் கடன் செயலியில் செலுத்தியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து பணத்தை செலுத்துமாறு கடன் செயலில் இருந்து நரேந்திரனுக்கு மிரட்டல் வந்துள்ளது.
இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நரேந்திரன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் நரேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சமீப காலமாகவே ஆன்லைன் கடன் செயலிகள் குறித்த பல்வேறு புகார்கள் வரும் நிலையில், தற்போது ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.