தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை பொதுமக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வாளராக ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் காட்டுமன்னார்கோவிலில் அண்ணாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ரோட்டில் தனியாக சென்ற ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சரவணனை பிடித்துவிட்டனர். அதன்பின் அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரிடம் பொதுமக்கள் சரவணனை ஒப்படைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.