Categories
தேசிய செய்திகள்

மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொத்து மதிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் ஒவ்வொரு மத்திய அமைச்சர்களும் மக்களுக்கு தெரியும்படி தங்களின் சொத்து மதிப்பை ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் வெளியிட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. மக்களுக்காக சேவை செய்ய பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வகையில் நம் நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் தனது சொத்து மதிப்பு பற்றிய முழு விபரத்தையும் மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி கடந்த வருடம் 2.85 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வைத்திருந்த பிரதமர் மோடி அவர்களின் சொத்து மதிப்பு தற்போது 3.07 கோடி என்பது தெரியவந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ஒரு வருடத்தில் 22 லட்சம் ரூபாய் அதிகமாகியதற்கான காரணம் எஸ்பிஐ வங்கியில் பிரதமர் மோடி அவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு வைத்திருப்பது தான். இதனால் கடந்த வருடம் அவரது கணக்கில் 1.6 கோடி ரூபாய் இருந்த நிலையில் தற்போது அந்தத் தொகை 1.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதோடு மோடி அவர்களின் வங்கி கணக்கில் ஒன்றரை லட்சம் ரூபாயும் கையிருப்பு தொகையாக 36,000 ரூபாயும் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை மியூச்சுவல் ஃபண்ட் பங்குச் சந்தை போன்ற எதிலும் முதலீடு செய்யாத பிரதமர் மோடி அவர்கள் தேசிய சேமிப்பு திட்டத்தின் கீழ் 8.93 லட்சம் முதலீடு செய்துள்ளார். அதேபோன்று 2012ஆம் ஆண்டு எல் டி பாண்ட் 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார் 1.48 லட்சம் மதிப்பிலான நான்கு தங்க மோதிரங்களை வைத்துள்ள பிரதமர் மோடி அவர்களின் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 1.97 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் இருக்கும் பிரதமரின் சொந்த ஊரான காந்திநகரில் 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3531.45 சதுர அடி கொண்ட 1.3 லட்சம் மதிப்புடைய வீட்டு மனை ஒன்றை இவர் வாங்கியுள்ளார். ஆனால் மூன்று பங்குதாரர்களுடன் சேர்ந்து அந்த மனையை மோடி அவர்கள் வாங்கியதால் அவருக்கு அதில் 25 சதவீதம் மட்டுமே சொந்தமாகும். 2.47 லட்சம் ரூபாயை மோடி அவர்கள் அந்த இடத்தில் முதலீடு செய்திருந்த நிலையில் தற்போது 1.10 கோடி ரூபாய் வரை அந்த இடத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |