ஊரடங்கு தடை உத்தரவை மீறி களக்காடு அருவிகளில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் யாருக்கும் தற்போது அனுமதி கொடுக்கவில்லை. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு தலையணை பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் தேங்காய் உருளி மற்றும் சிவபுரம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கை மீறி பொதுமக்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அருவிகளுக்கு சென்று நீராடி மகிழ்கின்றனர். இது குறித்து உள்ளூர் பொதுமக்கள் கூறும்போது வெளியூர் வாசிகளால் தங்களுக்கும் வன விலங்குகளுக்கும் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே அரசு இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.