கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதிக்கு புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளைச் சேர்ந்த 17 வாலிபர்கள் சுற்றுலா வேனில் சென்றுள்ளனர். இவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு குப்பனூர் மலைப்பாதை வழியாக ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வாழவந்தி பகுதியில் இருக்கும் ராமர் கோவில் அருகில் சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் ரமேஷ் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுற்றுலாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வாலிபர்கள் எப்படி வந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.