டிராக்டர் மோதியதில் தந்தை, மகன் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டி.கல்லேரி கிராமத்தில் முனியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெசிகா என்ற மகளும், செந்தூர் பாண்டியன்,லோகேஸ்வரன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஜெசிகா வாழாவெட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பும், செந்தூர்பாண்டியன் டி.கல்லேறி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பும், லோகேஸ்வரன் 4-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் முனியன் தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள ஒரு பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வாணாபுரம் பகுதியிலிருந்து வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி முனியனும், செந்தூர்பாண்டியனும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த லோகேஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேறையூர் காவல்துறையினர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.