டிராக்டர் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 5 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அர்த்தனாரிபாளையம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமாத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் மற்றும் வீரமுத்து என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 5 பேரும் சரக்கு ஆட்டோவில் மூங்கில் படல் செய்யும் வேலைக்காக பவானி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவை பூவலப்பருதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் ஒட்டி வந்தார். இதனையடுத்து ஆட்டோ துங்காவி பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 5 தொழிலாளர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் பலத்த காயமடைந்த 5 பேரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரங்கசாமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கணியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் டிராக்டர் சென்ற சில நொடிகளில் ஆட்டோ அந்தரத்தில் பறந்து வருவதும், சாலையில் அடிபட்டு கிடந்த பெண் சாவகாசமாக எழுந்து நடந்து வரும் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.