டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் சன் பவுலரிங் என்ற பெயரில் கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. அந்த பண்ணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அன்சாயி பசு மாத்திரி என்பவர் தனது மனைவி ஹசாரி மற்றும் 2 வயது குழந்தையான புஞ்சா ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பண்ணைக்கு சொந்தமான டிராக்டரில் கோழித் தீவன மூட்டைகள் ஏற்றி கொண்டுவரப்பட்டது. அந்த டிராக்டரை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வசிக்கும் பொன்னர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கோழி தீவன மூடைகளை பண்ணையில் இறக்கிவிட்டு டிராக்டரை பின்னோக்கி எடுத்துள்ளார்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை புஞ்சா மீது டிராக்டரின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த தாராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் டிராக்டர் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.