டிராக்டரில் மணல் அள்ளியவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் உள்ள வைகை ஆற்றை ஒட்டி கரிசல்குளம், பூக்குளம், கல்குறிச்சி வேதியரேந்தல், கீழப் பசலை, கால் பிரபு ஆகிய பகுதிகளில் மணல் அள்ளும் எந்திரங்கள் மூலம் லாரிகளில் மணல் கடத்துகின்றனர். கடந்த சில மாதங்களாக செங்கோட்டை கால்பிரபு, கல்குறிச்சி, வேதியரேந்தல், பூக்குளம் ஆகிய பகுதிகளில் மினிவேன்கள் மற்றும் சாக்குமூட்டையில் தலைச்சுமையாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மானாமதுரை காவல்துறையினர் செங்கோட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மணல் திருடி கொண்டு வந்தவர்களை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் டிராக்டரில் மணல் திருடியவர்கள் தப்பிச் சென்று விட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்து மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.