வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதினால் அதை பொதுமக்களுக்கு இலவசமாக வியாபாரிகள் வழங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியிருக்கும் 30-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ 5 ரூபாய் என்ற விலையில் இளங்கோ மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். அப்போது திடீரென வெண்டைக்காயின் விலை வீழ்ச்சி அடைந்த காரணத்தினால் வெளிமாவட்ட மற்றும் மாநில வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்யவில்லை.
இதனால் வெண்டைக்காயை விற்பனை செய்ய முடியாததினால் வியாபாரிகள் தவிர்த்து வந்த நிலையில் குடோனில் தேக்கமடைந்து வெண்டைக்காயை யாருக்கும் பயனின்றி வீணாகி வந்ததால் அதை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்பின் 4 மினி லாரிகளில் வெண்டைக்காயை வியாபாரிகள் ஏற்றுக்கொண்டு அவற்றை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அலைமோதி வந்து வெண்டைக்காயை பாலித்தீன் பை மற்றும் துண்டுகளில் வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர்.
இதுபற்றி வியாபாரிகள் கூறும் போது விவசாயிகளிடமிருந்து வெண்டைக்காயை கிலோ ஐந்து ரூபாய்க்கு வாங்கி அதனை வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களில் விற்பனை செய்வதாக இருந்தோம் பின் எதிர்பாராவிதமாக வரத்து அதிகரிப்பு மற்றும் வெண்டைக்காயின் விலை திடீரென அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தாங்கள் வாங்கிய வெண்டைக்காயை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் கூட வாங்க யாரும் முன் வராததால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தினால் நாங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக அரசுக்கு தெரிவிப்பதற்காகவும் யாருக்கும் பயனில்லாமல் வீணாப்போன வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வந்தோம் என அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.