நேற்று பாகிஸ்தானில் பேருந்து ஒன்று திருமண கோஷ்டி கூட்டத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பாகிஸ்தானில் உள்ள மண்டி பஹாவுதீன் என்ற நகரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருமண மண்டபத்துக்கு செல்ல மணமக்களின் உறவுக்காரர்கள் வாடகை வேன் ஒன்றை அமர்த்தியிருந்தனர். மேலும் வேனில் ஏறுவதற்காக வெவ்வேறு பகுதியில் இருந்து வந்த உறவுக்காரர்கள் நகரின் முக்கிய சாலையில் காத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் வாகனங்கள் வருவது கூட தெரியாத அளவிற்கு கடுமையான பனி மூட்டம் நிலவியது. இந்த நிலையில் அப்பகுதி வழியாக அதிவேகத்தில் வந்த பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோரம் காத்துக்கொண்டிருந்த திருமண கோஷ்டியினர் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த கோர சம்பவத்தில் திருமண கோஷ்டியினர் சிலர் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 11 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காவல்துறையினர் இந்த கோர விபத்துக்கு காரணமான பேருந்து டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். அதேபோல் பாகிஸ்தானில் தகுதியற்ற டிரைவர்கள் மற்றும் மோசமான சாலை கட்டமைப்புகளால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாக கூறப்படுகிறது.