பாகிஸ்தானில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் ரைட்டி ரயில்வே நிலையத்திற்கு அருகில் மில்லட் எனும் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதோடு மட்டுமல்லாமல் ராவல்பிண்டியிலிருந்து வந்த சர் சையத் என்னும் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீதும் வேகமாக மோதியுள்ளது. இதனால் 2 ரயில்களிலிருக்கும் பெட்டிகள் புரண்டும், கவிழ்ந்தும் கிடந்துள்ளது.
இந்தக் கோர விபத்தில் 31 நபர்கள் பலியாகியும், 100 க்கும் மேலானோர் காயமடைந்த நிலையில் தொடர்ந்து மீட்புக்குழுவினர்களால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ரயிலின் இடிபாடுகளில் இன்னும் 15 முதல் 20 பயணிகள் சிக்கியிருப்பதாகவும், உதவிக்காக கூப்பிடுபவர்களை மீட்க கனரக இயந்திரங்களை ஏற்பாடு செய்வதற்கு அதிகாரிகள் முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்திற்கு காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து நடந்த பகுதியை ரயில்வே துறை அமைச்சர் அசாம் கான் ஸ்வாதி பார்வையிட்டுள்ளார். மேலும் இதனால் அந்நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது, ரயில் விபத்தில் 30 பேர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரயில்வே துறையின் அமைச்சரை சம்பவம் நடந்த பகுதிக்கு செல்லவும், விபத்தினால் காயமடைந்தவர்களுக்கு உதவி புரியவும் உத்தரவிட்டேன் என்றுள்ளார்.