சுமார் 170 கிமீ தூரத்திற்கு 110 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே பொறியாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்வே சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனாவின் பரவல் குறைந்ததால் ஒரு சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. ஆனால் சரக்கு ரயில்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முழுவதுமாக ரயில்வே சேவை தொடங்கப்படவுள்ளதால் தண்டவாளத்தின் உறுதித்தன்மையை மற்றும் ரெயில் தண்டவாள பராமரிப்பில் தனிக்கவனம் செலுத்துவதற்கு ரயில்வே பொறியாளர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்தக் குழுவினர் தனி ரயிலை இயக்கி தண்டவாளத்தின் உறுதித்தன்மையை கண்டறியவுள்ளனர். அதன்படி நேற்று அந்த குழுவினர் திண்டுக்கல்லுக்கு தனி ரயிலில் மூலம் வந்துள்ளனர். இந்த தனி ரயிலில் என்ஜின் மற்றும் மூன்று பெட்டிகளை இணைத்து திண்டுகல்லில் இருந்து கரூர் வழியாக சேலம் வரை சுமார் 170 கிமீ தூரமும் 110 கிமீ வேகத்திலும் இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ரயில் சென்று கொண்டிருக்கும்போதே சிறிய மற்றும் பெரிய பாலங்களின் உறுதித்தன்மை, பாயிண்ட், சிக்னல், தண்டவாளம் ஆகியவற்றின் செயல்திறனை கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்டவாளத்தின் உறுதித்தன்மையை ஆராய்வது எளிதாக இருக்கும்.