இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும். சந்திரயான் – 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டை பொறுத்தவரை, ககன்யான், சந்திரயான் 3 ஆகிய திட்டங்களுடன் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வாகனத்தையும் அனுப்ப இஸ்ரோவால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் நானோ தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு, 500 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இதற்கு சுமார் 30 கோடி ரூபாய் செலவாகலாம். மேலும் பிஎஸ்எல்வி பணிகளுக்கு 6 குழுக்களின் கீழ் 600 பேர் பணியாற்றவுள்ளனர் என்று கூறினார்.