மின் கசிவு ஏற்படும் டிரான்ஸ்பார்மரை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த டிரான்ஸ்பார்மரில் கடந்த சில நாட்களாக மின்கசிவு ஏற்பட்டு அதிலிருந்து வரும் தீப்பொறி அங்குமிங்கும் பறக்கிறது. இவ்வாறு தீப்பொறிகள் கீழே விழுவதால் அவ்வழியாக செல்லும் பொது மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி பறப்பதால் அவ்வழியாக செல்வதற்கு அச்சமாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி விவசாயிகள் தங்கள் தோட்டங்களுக்கு செல்கின்றனர். இதனையடுத்து இந்த டிரான்ஸ்பார்மருக்கு அருகில் தென்னை மரங்கள் அதிகமாக இருப்பதால் அதிலும் தீப்பற்றி எரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த டிரான்ஸ்பார்மரை சீரமைத்து விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.