இன்னும் 6 மாத ஆட்சியில் தமிழகத்தை மொட்டை அடிக்க இருப்பதாக முக.ஸ்டாலின் அதிமுகவை விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளியில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், வருகின்ற தேர்தலில் முதலமைச்சர் பழனிச்சாமி வெற்றி பெற போவதில்லை என பன்னீர்செல்வம் தன்னை மாட்டி விட்டதே தெரியாம பழனிச்சாமி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட அத்தனையும் பொய்கள். பொய்களின் கூடாரமாக பழனிச்சாமி மாறிக்கொண்டிருக்கின்றன.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவந்ததாக பழனிச்சாமி சொல்றாரு. எய்ம்ஸ் மருத்துவமனை வரும் இடத்தை பாத்தீங்களான்னு தெரியல. வெறும் பெயர் பலகை மட்டும் தான் வைத்துள்ளார்கள். எந்த பணமும் ஒதுக்கவில்லை, மோடி ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா ? என்று இதுவரை தெரியல.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர் மோடி… எய்ம்ஸ் என்று சொல்லிட்டு போயிட்டாரு. கண்துடைப்புக்காக ஒரு கல்வெட்டை திறந்திட்டு போயிட்டாரு. அதன் பிறகு ஏதாவது நடந்துள்ளதா ? ஒரு செங்கல் எடுத்து வைக்கப்பட்டுள்ளதா ? 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவித்ததில் இருந்து கடந்த ஐந்தாண்டு காலமாக எல்லாமே நாடகங்கள் தான் நடந்து கொண்டிருக்கின்றது.
எய்ம்ஸ் மருத்துவமனை வந்த பாடில்லை, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்ததாக சொல்றது எடப்பாடி பழனிசாமியின் முதல் பொய். இரண்டாம் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி மூன்று லட்சம் கோடி முதலீட்டை தமிழ் நாட்டுக்கு கொண்டுவந்து சேர்த்ததாக பழனிச்சாமி அறிக்கை சொல்கிறது. அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். அதுல ரெண்டு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்ததாக சொன்னாங்க அதுவே வரவில்லை.
இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். அதுல மூணு லட்சம் கோடி முதலீடு வந்தது என்று சொல்கிறார்கள். இந்த மாநாடு நடந்ததிலிருந்து, இதன் மூலமாக வந்த முதலீடுகள் எவ்வளவு ? வேலைவாய்ப்புகள் எவ்வளவு ? என்ற புள்ளிவிவரத்தை எல்லாம் நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அதை தருவதற்கு பழனிச்சாமி தயாரா ? அண்மையில் கூட இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டும் எந்தப் பலனும் இல்லை.
3 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்வது இரண்டாவது பொய். அடுத்தது… காவிரி உரிமை மிட்டோம் என்று சொல்கிறார். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநிலத்திலிருந்து பெற்றுத்தருவதற்க்காக மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக ஏன் போராடவில்லை.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் தடுக்கப்படும். ஆனால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு தன்னுடைய கடமை முடிந்துவிட்டது முதலமைச்சர் பழனிசாமி நினைக்கிறார் என முக.ஸ்டாலின் தமிழக அரசின் மீது சரமாரியான குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.